Apologies to my ex-wife – AR Rahman| என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறேன்

சென்னை,
இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரின் இசையில் காதலிக்க நேரமில்லை, சாவா படங்கள் வெளியாகி கவனம் பெற்றன. கடந்தாண்டு மனைவியுடனான விவகாரத்தை அறிவித்த ஏ.ஆர்.ரகுமான் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார்.தற்போது, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. பல மொழிகளில் பல்வேறு ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.
தற்போது, மணிரத்னம் இயக்கிய ‘தக் லைப்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். அதிலும், ‘விண்வெளி நாயகா’ என்கிற இசை வசனம் பெரிதாகக் கவனம் பெற்றுள்ளது. ஏ. ஆர்.ரகுமான் இசையமைப்பில் இறுதியாக வெளியான, ‘உசுரே நீதான்’, ‘என்னை இழுக்குதடி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தன் முன்னாள் மனைவி சாய்ரா பானுவிடம் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ. ஆர். ரகுமானிடம், ‘மன்னிப்பாயா? என யாரிடமாவது நீங்கள் கேட்க வேண்டுமென்றால், அது யார்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு ரகுமான், “எல்லாரிடமும்தான் கேட்க வேண்டும். முக்கியமாக, குடும்பத்தினரிடம். என் மகன், மகள்கள், என் முன்னாள் மனைவி என அனைவரிடமும் மன்னிப்பாயா எனக் கேட்க வேண்டும்.” என்றார்.
ஏ. ஆர். ரகுமான் மனைவி சாய்ரா பானு தன் கணவரைப் பிரிவதாகக் கடந்தாண்டு தெரிவித்தார். தற்போது, ரகுமான் முன்னாள் மனைவி எனக் குறிப்பிட்டு இருவரும் பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.