Ajith Tributes To Racer Ayrton Senna – Viral Video | ரேஸர் அயர்டன் சென்னாவுக்கு மரியாதை செலுத்திய அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகராக இருக்கும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்தாண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.அதனை தொடர்ந்து, ஐரோப்பாவில் ஜிடி-4 கார் பந்தயம் நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பார்முலா 1 கார் பந்தய வீரரான அயர்டன் சென்னா சிலையின் காலில் நடிகர் அஜித் குமார் முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அயர்டன் சென்னா பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பார்முலா 1 கார்பந்தய வீரர் ஆவார். இவர் 1988, 1990, 1991 ஆண்டுகளில் மெக்லாரன் அணிக்காக பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பை வென்றார். பார்முலா 1 வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் 1994 மே 1 அன்று சான் மரினோ கிராண்ட் ப்ரீயில் (இமோலா) வில்லியம்ஸ் அணிக்காகப் பந்தயத்தில் ஈடுபட்டபோது, தாம்புரெல்லோ வளைவில் விபத்துக்குள்ளாகி (34 வயது) உயிரிழந்தார். இவரது மரணம் பார்முலா 1 பாதுகாப்பு விதிகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. சென்னாவின் ஆர்வம், திறமை, மற்றும் மனிதாபிமான செயல்கள் அவரை உலகளவில் புகழ்பெறச் செய்தன. அவரது நினைவாக பிரேசிலில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக “சென்னா நிறுவனம்” இயங்குகிறது.