Ajith does not want to build a political platform based on his cinematic fame and fan base – Parthiban | சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் அஜித்

ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதால் சைகை மூலம் அவர்களை நடிகரும் ரேசருமான அஜித் குமார் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது. தன்னுடைய ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை தொடர்ச்சியாக கண்டித்து வந்துள்ளார். அஜித் குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அஜித்குமார் குறித்து பார்த்திபன் ஒரு நேர்காணலில் பேசிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், “அஜித் ரொம்ப தனித்துவமானவர் அவரோட முடிவெடுக்கும் திறன் எல்லாம் அவ்வளவு தெளிவா இருக்கும்” என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த பார்த்திபன் , “அஜித்குமார் சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே புரோமோசனுக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர், எனக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்காக தனது ரசிகர்களை பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பார்த்திபனும் மறைமுகமாக அதை குறிப்பிட்டு விஜயை விமர்சித்துள்ளார்.