After the release of “Dhuruva Nakshatram” next film – Gautham Menon | “துருவ நட்சத்திரம்” வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படம்

சென்னை,
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், ரீத்து வர்மாஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
2017ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’, நிதி பிரச்னை உள்பட பல பிரச்னைகளால் நீண்ட காலமாக வெளிவராமல் தள்ளிப்போனது. 2023-ல் நவம்பர் மாதம் ‘துருவ நட்சத்திரம்’ வெளியிடப்படவிருந்த நிலையில், படம் வெளியிடுவது தள்ளிப்போவதாக வெளியீட்டுக்கு முந்தைய நாளில் இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்தார். அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. சூர்யாவை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை 2010ம் ஆண்டு துவங்கினார் கவுதம் மேனன் . ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கவுதம் மேனன் துருவ நட்சத்திரம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் அதில் ” துருவ நடசத்திரம் திரைப்படம் வெளியீட்டிற்கு பிறகு தான் நான் மற்ற வேலைகளை தொடங்க போகிறேன். நான் அடுத்து எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. திரைப்படத்தை முதலீட்டாளர்களிடம் காண்பித்தோம் அவர்களுக்கு பிடித்துள்ளது. படத்தின் மீதுள்ள சட்ட சிக்கல்களை தீர்த்து வருகிறோம். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக திரைப்படம் வெளியாகும்.” என கூறியுள்ளார்.