Actress Kalyani Priyadarshan tells Dulquer Salmaan: Thank you for being my first call for advice | எனக்கு எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் வந்து நிற்பது துல்கர் சல்மான்

துல்கரின் 42வது பிறந்த நாளையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அவ்வகையில் ‘வரனே அவஷ்யமுண்ட்’ படத்தில் துல்கருடன் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், “துல்கரின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் நிறைய எழுதி நீண்ட பதிவினைப் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவிப்பேன். இந்தப் பிறந்த நாளில் கொஞ்சம் ஸ்பெஷலாக நான் நடிக்கும் ‘லோகா’ படத்தின் டீஸரைப் பகிர்ந்து வாழ்த்துச் சொல்கிறேன். எனக்கு வாய்ப்பளித்து, இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார் என்பது கூடுதல் ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது.
திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர். கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் எனக்காக வந்து நிற்பது, அறிவுரைகள் வழங்குவது அவராகத்தான் இருக்கும். நான் தனியாக உணர்ந்ததில்லை அதற்குக் காரணம் நீங்கள்தான். நீங்கள் இல்லையென்றால் நான் என்னவாகிருப்பேன் என்றே எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு எல்லா தருணங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறீர்கள்” என்று நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் துல்கருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் அடுத்த படத்தை வெளியிட தயாராகி இருக்கிறார். இப்படத்திற்கு ”லோகா” எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். இது துல்கர் சல்மானின் வேபேரர் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி வருகிறது. துல்கர் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.