Actor Soori congratulates National Award winner MS Bhaskar

எம்.எஸ் பாஸ்கர், தமிழ் திரையுலகின் அற்புதமான கலைஞர். நாடகக் கலைஞரான இவர், 1987-ம் ஆண்டு வெளியான ‘திருமதி ஒரு வெகுமதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், 2004-ம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படம் இவருக்கான முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.அதைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர், சமீபகாலமாகக் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.அதில் முக்கியமானது ஹரிஷ் கல்யாணுடன் இவர் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம். இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ் பாஸ்கருக்கு 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. எம்.எஸ்.பாஸ்கர் வேட்டி-சட்டையுடன் மிகவும் எளிமையாக வந்து விருதை பெற்றார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருதுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விருதை வைத்து தலை வணங்கி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு வந்து அவரது உருவப் படத்திற்கு முன் விருது மற்றும் அதனுடன் வழங்கிய சான்றிதழை வைத்து மரியாதை செய்தார்.
இந்த நிலையில், நடிகர் சூரி தன் எக்ஸ் பக்கத்தில், “கஷ்டங்களும் தியாகங்களும் நிறைந்த பல ஆண்டுகளின் உழைப்பின் பலன் இன்று தேசிய விருதாக மலர்ந்துள்ளது. இவரின் பயணம் எனக்கு ஒரு பெரிய பாடமாகவும் ஊக்கமாகவும் உள்ளது.இதே துறையில் பணிபுரிந்து, இத்தகைய சிறந்த கலைஞரை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.