Actor Rajesh’s death could not be taken naturally – Vairamuthu

சென்னை,
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ் (வயது 75). இவர் 1974-ம் ஆண்டு வெளியான ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதிச்ச ராஜேஷ் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராஜேஷ் உயிர்ழந்தார். ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவுக்கு தமிழ் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் வைரமுத்து தனது எக்ஸ் பக்கம் வாயிலாக ராஜேஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜேஷ் என்ற மனிதரின் பெளதிக உடலுக்கு மூன்று மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன், ஒரு முற்போக்குச் சிந்தனையாளன், ஓர் எழுத்தாளன் என்ற மூன்று இழப்புகள் ஒரே நேரத்தில் நேர்ந்துவிட்டன. கலை உலகம், அரசியல் உலகம், அறிவுலகம் குறித்த தீர்க்கமான சிந்தனையாளர் திடீரென்று மறைந்துவிட்டார்.என் அன்னையின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க 10 நாட்களுக்கு முன்பு வந்துசென்றவர்க்கு இன்று நானே இரங்கல் செய்தி சொல்வது சுமக்க முடியாத துக்கமாகும்.மரணம் இயற்கையெனினும் இயல்பாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. அவரது உயிர் கலையமைதி கொள்ளட்டும். ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.