Actor Dhanush shares memories of Madurai

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. ‘இட்லி கடை’ படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியானது. கடந்த 20ந் தேதி கோவை புரோஷன் மாலில் ‘இட்லி கடை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்ததை அடுத்து, கோவையில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் தனுஷ், “ரொம்ப குடும்ப கஷ்டம், அப்பா கிட்ட காசு இல்லை, பொழப்புத் தேடி சென்னைக்குப் போகலாம்னு இருந்தாங்க அப்பா, ஆனால், அதுக்குக்கூட அவர்கிட்ட காசு இல்லை. மதுரையில ஒரு சொந்தக் காரங்க கிட்ட காசு வாங்கிட்டு போகலாம்னு இருந்தப்போ, மதுரை போக கூட காசு இல்லை. அப்பாவும், குழந்தைய சுமந்துகிட்ட இருக்க எங்க அம்மாவும் சுமார் 120 கிலோ மீட்டர் நடந்தே மதுரை வந்தாங்க. இப்போ மதுரையில நான் இங்க இந்த மேடையில இருக்கேன். எங்க அப்பாவும், அம்மாவும் அன்னைக்கு நடந்தே வந்து, இன்னைக்கு இந்த மேடையில என்னை ஏத்தியிருக்காங்க. அவங்கள இங்க கூட்பிட்டு வந்து, இந்த மேடையில ஏத்தியிருந்தா மனசுக்கு நிறைவாக இருந்திருக்கும். ஆனால், அவங்கனால இங்க வார முடியல. என்னைப்போல என் ரசிகர்கள் எல்லோரும் இதுபோல பல மேடைகள் ஏறனும், முன்னேறனும்.
மதுரை நான் ஓடி, ஆடி, விளையாடிய ஊர். ‘ஆடுகளம்’ படத்தப்போ, ‘ஒத்த சொல்லால’ பாட்டுக்கு யாருக்கும் தெரியாமல், நடு ரோட்ல இறங்கி ஆட சொன்னாங்க. உண்மையிலேயே நடு ரோட்ல இறங்கு ஆடுனேன். பார்க்க மதுரை பையனவே இருந்ததால யாரும் என்னை கண்டுபிடிக்கல. அப்போ நம்மளும் மதுரை பையன்தானு ரொம்ப சந்தோஷ பட்டேன். மதுரை என்னோட மனசுக்கு நெருக்கமான ஊர்” என்று பேசியிருக்கிறார்.