Actor Ajith Kumar Padma Bhushan Award/நடிகர் அஜித்குமார் பத்மபூஷண் விருது

சென்னை,
நாட்டின் குடிமக்களுக்கான உயரிய விருதுகளாக உள்ள பத்ம விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தன்னுடைய மனப்பூர்வ நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்திய ஜனாதிபதியிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிகு கவுரவத்திற்காக நான், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு என்னுடைய மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட நபருக்கு கிடைத்த பாராட்டு என்றில்லாமல், கூட்டு முயற்சி மற்றும் பலருடைய ஆதரவு ஆகியவற்றிற்கான நற்சான்று என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று திரை துறையினர் மற்றும் விளையாட்டு துறையை சேர்ந்த ஆதரவளித்த அனைவருக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தன்னுடைய நன்றியை அவர் தெரிவித்து கொண்டார். இறுதியாக ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும், அவர்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக தன்னுடைய நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.