Aamir Khan introduced his girlfriend on his 60th birthday

மும்பை,
அமீர்கான் முதன் முதலில் ரீனா தத்தா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1986-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் 16 ஆண்டுகள் கழித்து 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இருவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இத்தம்பதிக்கு ஆஷாத் என்ற மகன் இருக்கிறார். இப்போது மூன்றாவதாக லிவ் இன் உறவில் புதிய காதலியுடன் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார் அமீர்கான். நேற்று இரவே தனது குடும்பத்தினருடன் சேர்ந்து 60வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்பட்ட விழாவில் அவரது காதலியை அறிமுகம் செய்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேட்டியில், “எனது காதலியை இந்த நேரத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நானும், கெளரியும் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக சந்தித்துக் கொண்டோம். இப்போது நாங்கள் லைப் பார்ட்னர்கள். ஒன்றரை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கெளரியை எனது நண்பர்கள் ஷாருக்கான், சல்மான் கானுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். எனது 60 வயதில் திருமணம் மகிழ்ச்சியை கொடுக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது முன்னாள் மனைவிகளுடன் சிறந்த உறவுகளைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் அதிர்ஷ்டம். எங்களது உறவால் எங்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்” என்றார்.
அமீர்கான் காதலி கௌரி ஸ்ப்ராட் பெங்களூருவை சேர்ந்தவர். இவர் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் காதலியான கௌரிக்கு ஆறு வயதில் மகன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.