A.R. Rahman is in good health: Information released by his son

சென்னை,
நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் இருப்பதாக அவரது மகன் ஏ.ஆர்.அமீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
எங்கள் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். என் தந்தைக்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சற்று பலவீனமாக இருந்தது, அதனால் நாங்கள் தொடர்ந்து சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம், ஆனால் அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் அன்பான வார்த்தைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் அக்கறையையும் தொடர்ந்த ஆதரவையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏ.ஆர்.ரகுமான், இன்று காலை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகளுடன் சென்றநிலையில், வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.