71வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த துணை நடிகை விருது பெற்றார் ஊர்வசி

புது டெல்லி,
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கிவருகிறார்.
71ஆவது தேசிய விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஊர்வசிக்கு உள்ளொழுக்கு (மழையாளம்) படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
நடிகை ஊர்வசி ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார். உள்ளொழுக்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிக்கைக்கான மலையாள சினிமா விருதையும் வென்றுள்ளார். உள்ளொழுக்கு படம் கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. ஊர்வசி ஏற்கனவே அசுவிண்டே அம்மா என்ற படத்திற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார்.
ஷாருக்கானுக்கு எந்த அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது என்றும், விஜயராகவன் எப்படி துணை நடிகரானார் என்றும் ஊர்வசி சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். விஜயராகவனுக்கு சிறப்பு விருது கொடுத்திருக்கலாமே என்றும், அவரது சினிமா அனுபவத்தை விருது தேர்வுகுழு ஆராய்ந்ததா என்றும் ஊர்வசி சரமாரியான கேள்விகளை எழுப்பி இருந்தார்.
90-களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ஊர்வசி மற்றும் பார்வதி திருவோது ஆகியோர் இணைந்து ‘உள்ளொழுக்கு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ டாமி இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.