7 ஆண்டுகளாக சொன்ன சொல்லை காப்பாற்றும் சிவகார்த்திகேயன்.. குவியும் வாழ்த்துகள்!

சென்னை,
இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்பட்டவர் நெல் ஜெயராமன். இவர் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். 12 ஆண்டுகள் நெல் திருவிழா நடத்தி 174 அரியவகை நெல் வகைகளை சேகரித்தவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தோல் புற்றுநோயால் காலமானார்.
நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வகையில், சிவகார்த்திகேயன் தான் கொடுத்த வாக்கை மீறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவிற்கான பணத்தை கட்டிவருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் இரா. சரவணன் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார்.
இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா. நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன். அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’ என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி…” என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.