5 கோடி பார்வைகளை கடந்த "தக் லைப்" படத்தின் "முத்த மழை" பாடல்

சென்னை,
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம் ‘தக் லைப்’. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த ஜூன் 5-ந் தேதி வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைப்’ படத்தில் ‘முத்த மழை’ பாடல் இடம் பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை பாடகி தீ பாடியுள்ளார். ஆனால் ‘முத்த மழை’ பாடலின் சின்மயி வெர்ஷன்தான் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. அதாவது, தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தீ பாடவிருந்த இப்பாடலை, அவர் வர இயலாததால் சின்மயி பாடி அனைவரையும் கவர்ந்தார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், சிவா அனந்த் வரிகளில் உருவான இப்பாடல், உலக டிரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 10-ம் இடத்தையும், இந்திய டிரெண்டிங் பாடல்கள் லிஸ்டில் 8-ம் இடத்தையும் பிடித்தது. இப்பாடல் 5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.