'3 பிஎச்கே' படத்தை பாராட்டிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து!

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், ‘மிஸ் யூ’ படத்தை தொடர்ந்து ‘3 பிஎச்கே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது சித்தார்த்தின் 40-வது படமாகும். இந்த படத்தை ‘8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்’ போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தினை திரைப்பிரலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து 3 பிஎச்கே படத்தினை பாரட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “3 பிஎச்கே படம் மிகவும் அருமையான படம். சிறந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஸ்வா அண்ணன்,சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் அனைவரும் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.