3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர்| Actress Meera Mithun appears after 3 years of absconding |

சென்னை,
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் (வயது 34) பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாகப் பேசி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
இது குறித்த புகாரில், போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடந்த 2021ம் ஆண்டில் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர். பின், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் . வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட மீரா மிதுன், விசாரணைக்கு ஆஜராகாததால், 2022ம் ஆண்டில் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது. மூன்று ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் சுற்றி திரியும், தன் மகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என, மீரா மிதுன் தாய் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அவரை மீட்டு நேரில் ஆஜர்படுத்தும்படி, காவல்துறைக்கு உத்தரவிட்டது. கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, டெல்லியில் சுற்றி திரிந்த மீரா மிதுன் மீட்கப்பட்டு, அங்குள்ள மன நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பிய மீரா மிதுன், தன் தாயுடன் ஆஜரானார்.
அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, மீரா மிதுனுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால், மனிதாபிமான அடிப்படையில், அவர் மீதான பிடிவாரண்டை வலியுறுத்த விரும்பவில்லை, என்றார். இதை பதிவு செய்த நீதிபதி, மீரா மிதுனுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்ப பெற்று உத்தரவிட்டு, விசாரணையை நவ., 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.