2வது தேசிய விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ்-க்கு தனுஷ் வாழ்த்து

சென்னை,
2023-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இவற்றில் ‘வாத்தி’ திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். 2-வது முறையாக தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ், தனக்கு கிடைத்த விருதுக்காக நன்றி. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. நான் எதிர்பாக்கவே இல்ல.. சர்ப்ரைஸ் ஆகிட்டேன் என்று கூறியுள்ளார்.
‘சூரரைப் போற்று’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த 2023-ம் ஆண்டு வெளியான தனுஷின் ‘வாத்தி’ படத்துக்காக மீண்டும் இரண்டாவது முறையாக அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில்,”இரண்டாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாத்தி படத்துக்காக என்னைத் தேர்ந்தெடுத்த சகோதரர் தனுஷுக்கு எனது மனமார்ந்த நன்றி. பொல்லாதவன் முதல் அசுரன், வாத்தி, இட்லி கடை வரையில் எங்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு, எங்கள் இருவருக்கும் ஆக்கப்பூர்வமாக பலனளித்து வருகிறது.” என பதிவிட்டிருந்தார்..
இந்நிலையில் 2வது தேசிய விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ்க்கு தனுஷ் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில், “வாத்தி படத்திற்காக தனது 2வது தேசிய விருதை வென்றுள்ள சகோதரர் ஜி.வி.பிரகாஷ்-க்கு வாழ்த்துகள். தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களது சிறப்பான படைப்பு இனிமேல்தான் வரப்போகிறது என எனக்குத் தெரியும். அடுத்தடுத்து நாம் இணையப்போகும் படங்களுக்கு காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி மகனான சிறுவன் ஜி.வி.பிரகாஷ் ‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடல் மூலம் அறிமுகமானார். வசந்தபாலனின் ‘வெயில்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘கிரீடம்’, ‘பொல்லாதவன்’, ‘காளை’, ‘ஆனந்த தாண்டவம்’, ‘அங்காடி தெரு’ என தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை தேடிப் பிடித்துக் கொண்டார் ஜி.வி. ‘மதராசப்பட்டினம்’ படத்தின் பாடல்கள் பெற்ற வரவேற்பு ஜி.வி.பிரகாஷை மேலும் உயரம் செல்ல உதவியது. வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படம் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதை பெற்று தந்தது.