'2கே லவ் ஸ்டோரி' திரைப்பட விமர்சனம்

'2கே லவ் ஸ்டோரி' திரைப்பட விமர்சனம்


சென்னை,

சுசீந்திரன் இயக்கத்தில் காதலர் தினத்தில் வெளியான படம் ‘2கே லவ் ஸ்டோரி’. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கிய ‘2கே லவ் ஸ்டோரி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

ஜெகவீரும், மீனாட்சி கோவிந்தராஜனும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகுகிறார்கள். பள்ளி, கல்லூரி தாண்டி சொந்தமாக போட்டோஷூட் தொழிலும் செய்கின்றனர். இந்த நிலையில் ஜெகவீர், கல்லூரி ஜூனியரான லத்திகாவை காதலிக்கிறார். ஆனால் எதிர்பாராத விபத்தில் சிக்கி லத்திகா உயிரிழக்க, ஜெகவீர் உடைந்து போகிறார். அவரை போராடி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து கலகலப்பாக இருக்க செய்கிறார், மீனாட்சி.

நண்பர்களான ஜெகவீருக்கும், மீனாட்சி கோவிந்தராஜனுக்கும் காதல் மலரும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். குடும்பத்தினரும், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். அவர்களுக்குள் காதல் வந்ததா? நண்பர்களாகவே நீடித்தார்களா? என்பது மீதி கதை.�

ஜெகவீர் காதலராக, நண்பராக இரு பரிமாணத்தில் தேர்ந்த நடிப்பை கொடுத்து அசத்தி உள்ளார். பெண்களின் உணர்வுகளை மதிக்கும் அவரது பண்பு கதாபாத்திரத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது. ஆரவாரம் இல்லாத அமைதியான நடிப்பால் வசீகரிக்கிறார் மீனாட்சி கோவிந்தராஜன் தோழியாக தனது ஆளுமையை காட்டும் இடங்களில் ரசனை.

சில காட்சிகளே வந்தாலும் லத்திகா மனதில் நிற்கிறார். பாலசரவணன், சிங்கம்புலி, ஜி.பி.முத்து, ஆண்டனி பாக்யராஜ் சிரிக்க வைக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ், வினோதினி, ஹரிதா, நிரஞ்சன் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. வி.எஸ்.ஆனந்தா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ண மயம். டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை தாங்கி பிடிக்கிறது. சில காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம்.

இன்றைய தலைமுறையினர் காதல், நட்பை எப்படி அணுகுகிறார்கள் என்பதை அழுத்தமான திரைக்கதையில் சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படியும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஆண், பெண் நட்பாக பழகுவதை தவறாக பார்க்க வேண்டாம் என்ற விழிப்புணர்வு படமாகவும் கொடுத்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *