15 வயதில் தேசிய விருது…6 ஆண்டுகளில் 25 படங்கள்…21 வயதில் சோகம் – யார் அந்த நடிகை தெரியுமா?

சென்னை,
15 வயதில் திரையுலகில் நுழைந்தவர் இந்த நடிகை. குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். ஆறு ஆண்டுகளில் சுமார் 25 படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். ஆனால் அவரது திரையுலக வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது, எதிர்பாராத ஒரு சோகம் அவரது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த நடிகையின் பெயர் மோனிஷா உன்னி. அவர் பழம்பெரும் மலையாள நடிகை ஸ்ரீதேவி மற்றும் தொழிலதிபர் நாராயண் உன்னியின் மகள்.
சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட இவர், 15 வயதில் தேசிய விருதை வென்று தனது முத்திரையைப் பதித்தார். எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கிய நகசதங்கள் (1986) மூலம் மோனிஷா சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்காக தனது 15 வயதில், மோனிஷா சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
அடுத்த ஆறு ஆண்டுகளில், அவர் 25 படங்களில் நடித்து குறுகிய காலத்தில் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற்றார். தமிழில் இவர் ”உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்” படத்தில் நடித்திருக்கிறார்.
அவரது வாழ்க்கை நல்ல நிலையில் இருந்தபோது…1992 -ம் ஆண்டு 21 வயதில் கார் விபத்தில் உயிரிழந்தார். மலையாளப் படமான செப்படி வித்யாவில் நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. அவர் சென்று கொண்டிருந்த கார் பேருந்தில் மோதியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.