13 வயது இளம் ரேஸிங் வீரரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் அஜித்

நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. அப்படத்திற்கு பிறகு அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களிடம் பேசிய அஜித், “கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எளிதானதுனு தவறாக நினைக்கிறாங்க. மோட்டார் ஸ்போர்ட்ஸை மக்களிடையே புரோமோட் பண்ணுங்க, என்னை இல்ல. இந்த விளையாட்டு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எவ்வளவு சவாலானதுன்னு மக்களுக்கு தெரியப்படுத்துங்க. இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக, மனரீதியாக கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கஷ்டங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸ் மட்டுமல்ல அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் ஆவார்கள். ஒரு நாள் இந்தியாவிலிருந்து நிச்சயமாக ஒரு பார்முலா 1 சாம்பியன் உருவாகுவார் என்று நம்பிக்கை இருக்கு.” என்றார்.
அஜித்தின் இந்த பேச்சு வைரலானது. தன்னை விட கார் ரேஸ் மீது கொண்ட காதல் எவ்வளவு என்பதை இது வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் இன்று 13- வயது கார் பந்தய வீரரான இமானுவேல் ஜேடனிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார். அஜித்தின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.