ஹேமா கமிட்டி சார்ந்த வழக்குகள் முடித்துவைப்பு

ஹேமா கமிட்டி சார்ந்த வழக்குகள் முடித்துவைப்பு


சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகர் திலீப், நடிகை ஒருவரை கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்ட பிறகு நடிகைகளுக்காக, சினிமாவிலுள்ள பெண்களுக்கான கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. இதில், நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர், படத்தொகுப்பாளர் பீனா, இயக்குனர் அஞ்சலிமேனன் உள்பட முக்கியமானோர் இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், கேரள அரசாங்கம் 2017-ல் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சுரண்டல்களை ஆராய ஓய்வுபெற்ற கேரள ஐகோர்ட்டு நீதிபதி ஹேமா தலைமையில், மூத்த நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.பி.வல்சலாகுமாரி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஒரு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி விரிவாக விசாரணை நடத்தி கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இவ்வளவு காலம் வெளிவராத அந்த அறிக்கை, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரப்பட்டதாலும், கோர்ட்டு தீர்ப்பின் எதிரொலியாலும் வெளியுலகத்துக்கு தெரிந்தது. 

மலையாள திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சில வழக்குகள் முடிக்கப்பட்டன. ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், குழுவின் முன் வாக்குமூலம் அளித்தவர்கள் வழக்கை தொடர ஆர்வம் காட்டாததால், சிறப்புக் குழுவானது பெண் திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த 35 வழக்குகளை முடித்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வாக்குமூலம் அளிக்க முன்வராததால், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளும் முடித்துவைக்கப் பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த இந்த அறிக்கையின் அடிப்படையில், ஹேமா கமிட்டி அறிக்கையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திரைப்படத் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு தள்ளி வைத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *