ஹாலிவுட் வெப்தொடரில் நடிக்கும் சித்தார்த்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் இறுதியாக நடித்த சித்தா, மிஸ் யூ, 3 பிஎச்கே ஆகிய திரைப்படங்கள் கவனிக்கப்பட்டன. சித்தா விமர்சன ரீதியாகவும் சித்தார்த்துக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இந்த நிலையில், சித்தார்த் புதிய இணையத்தொடரில் நடிக்கவுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள இத்தொடரில் சித்தார்த் அமித் முகர்ஜி என்ற கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார். நடிகை ப்ரீடா பின்டோ பாருல் சௌதரி திருமணமான பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார். அவளது முன்னாள் காதல் மீண்டும் வாழ்வில் வரும்போது, அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்கிறது. இவர்களது காதல் இந்திய அமெரிக்க சமூகத்தை அதிரச் செய்கிறது.
‘அன்அக்கஸ்டம்ட் எர்த்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடரை வார்னர் பிதர்ஸ் தயாரிக்கின்றனர். ஜும்பா லகிரி என்கிற நாவலைத் தழுவி உருவாகும் இத்தொடரின் படப்பிடிப்பு லண்டனில் துவங்கவுள்ளது. தமிழ் சினிமாவிலிருந்து சர்வதேசம் வரை சென்ற சித்தார்த்துக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.