"ஸ்டோலன்" படக்குழுவை பாராட்டிய கமல்

தயாரிப்பாளர் கௌரவ் திங்கரா தயாரிப்பில் இயக்குநர் கரண் தேஜ்பால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்டோலன் . கதை நாயகனாக நடிகர் அபிஷேக் பானர்ஜி வடமாநில ரயில் நிலையம் ஒன்றில் தன் சகோதரருடன் இருக்கும்போது அங்கு குழந்தை ஒன்று காணாமல் போகிறது. இவர்கள்தான் சாட்சி என்பதால் குழந்தையைத் தேடி நாயகனும் குழந்தையின் தாயும் மேற்கொள்ளும் தேடுதலாக இப்படம் உருவாகியிருந்தது. 1.30 மணி நேரம் கொண்ட இப்படம் 2023ம் ஆண்டே தயாரானது. ஆனால், திரையரங்குகளில் வெளியிடாமல் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அமேசான் பிரைம் நிறுவனம் இதன் ஓடிடி உரிமையைப் பெற்று கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிட்டனர். ஓடிடிக்கு வந்தபின் நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வெறும் குழந்தைக் கடத்தல் படமாக இல்லாமல் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் சுரண்டல்களையும் படம் பேசியதால் விமர்சகர்களிடம் நேர்மறையான கருத்துகளைப் பெற்றது.
இந்த நிலையில், ‘ஸ்டோலன்’ படத்தைப் பார்த்த நடிகர் கமல் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.