ஸ்கூபா டைவிங்கின்போது உயிரிழந்த பிரபல பாடகர்; அதிர்ச்சி சம்பவம்

சிங்கப்பூர்,
அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கர்க் (வயது 52). இவர் அசாம் சினிமா துறையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். மேலும், பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். அதேபோல், அசாம் சினிமா துறையில் பல படங்களில் நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர் என பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.
இதனிடையே, ஜுபின் கர்க் சிங்கப்பூர் நாட்டிற்கு சென்றிருந்தார். அவர் நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள வடகிழக்கு திருவிழா என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார்.
இந்நிலையில், ஜுபின் கர்க் இன்று சிங்கப்பூரில் உள்ள கடலில் ஸ்கூபா டைவிங் மூலம் ஆழ்கடலில் நீந்தி கடல்வாழ் உயிரினங்களை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஜுபின் கர்க்கிற்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்ட சக ஸ்கூபா டைவிங் நீச்சல் வீரர்கள் சிங்கப்பூர் ஜெனரல் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜுபின் கர்க்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், ஜுபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜுபின் கர்க்கிற்கு மறைவிற்கு அசாம் முதல்-மந்திரி, திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.