வைரலாகும் 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' பட டிரெய்லர்

வாஷிங்டன்,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ ஹாரர் படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திகில் படங்களில் ஒன்று ‘தி கான்ஜுரிங்’. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பேய் படம். இந்த படத்தின் வெற்றியையடுத்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதன் முதல் பாகம் கடந்த 2013-ம் ஆண்டிலும், 2-ம் பாகம் 2016-லும், 3-ம் பாகம் 2021-லும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது இதன் 4-ம் பாகம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில் முந்தைய பாகங்களில் நடித்த பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இது கான்ஜுரிங் படங்களில் கடைசி பாகம் என்பதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.