வெற்றி மாறனின் சினிமாட்டிக் யுனிவர்சில் இணைந்த மணிகண்டன்

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த மே 5-ந் தேதி தக் லைப் படம் வெளியானது. இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூரில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது.
சமீபத்தில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு நடைப்பெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் எடுப்பதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாக சமீபத்தில் தகவல் வெளிவந்து அது உண்மையில்லை என மறுத்து வெற்றிமாறன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
சிம்பு 49-வது படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஒன்று இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்திலும் நடிக்கிறார். படத்தில் குட் நைட் புகழ் மணிகண்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிகண்டன் நடிக்கும் கதாப்பாத்திரம் இப்படத்திலும் ‘வட சென்னை 2’ படத்திலும் இடம் பெறும் கதாப்பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
‘ஜெய் பீம், லவ்வர், குட் நைட்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.