வெற்றிமாறனின் ”மனுஷி” பட விவகாரம்…மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்|Censor Board announces re-examination of Vetrimaaran’s ‘Manushi’ film

சென்னை,
”மனுசி”படத்தின் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் குறித்து மனுதாரருக்கு (வெற்றிமாறன்) தெரிவிக்கப்படும்” என்று சென்சார் போர்டு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”அறம்” பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுசி”. இப்படத்தில் மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டுமே அந்த காட்சிகளை மாற்றி அமைக்க முடியும் என கூறி சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 11-ம் தேதிக்கு(இன்று) ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்டு தரப்பில், “மனுஷி திரைப்படத்தை இன்று மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருக்கிறோம், அதில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்று மனுதாரர், அந்த காட்சிகளை நீக்கினால் என்ன வகையான சான்று வழங்கப்படும் என்ற முடிவை மறு ஆய்வு குழு தெரிவிக்கும். காட்சிகளை நீக்க மறுத்தால், சென்சார் போர்டு முடிவுக்கு அறிக்கை அனுப்பப்படும்,” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மறு ஆய்வு குழு படத்தை பார்த்து, அதன் முடிவுகளை மனுதாரருக்கு தெரிவித்தபின் வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி விசாரணையை வருகிற 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.