வெற்றிமாறனின் “அரசன்” படத்தின் முன்னோட்ட வீடியோ அப்டேட்

சென்னை,
சிலம்பரசன் “தக் லைப்” திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் “அரசன்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதாநாயகி யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க சமந்தா, சாய் பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய முன்னணி நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. எஸ்டிஆர் மற்றும் வெற்றிமாறன் படத்தின் முன்னோட்ட வீடியோ திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியாகுமென தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வரும் 17ம் தேதி காலை 10.07க்கு யூடியூபில் வெளியாகிறது. 16ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக முன்னோட்ட வீடியோ திரையிடப்படும் எனவும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.