”வீட்டுக்கு போனதும் நான் விழுகணும்” இணையத்தில் வைரலாகும் அஜித்- ஷாலினி

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதியாக அஜித் – ஷாலினி உள்ளனர். இருவரும் இணைந்து அமர்க்களம் என்ற படத்தில் நடித்த போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமா படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தார்.
கடந்த ஏப்ரல் மாதம்தான் அஜித் – ஷாலினி திருமணம் நடைபெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனையொட்டி இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி அன்பை வெளிப்படுத்தினர். இந்த புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின. உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் சினிமா,கார் ரேஸ் என பலதுறைகளிலும் கலக்கி வந்தாலும் தனது குடும்பத்தினருடனும் நேரம் செலவிடுவதை தவறவிட மாட்டார்.
இந்த நிலையில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன் பூஜையில் கலந்துகொண்ட காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன. இந்த வீடியோவில், அஜித் வேண்டாம் என மறுத்தும் ஷாலினி காலில் விழுந்து வணங்கினார். உடனடியாக அஜித், “வீட்டுக்குப் போனதும் நான் விழுகணும்” எனச் சொல்லி சிரித்தார். இந்த விடியோவை ஷாலினி தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கேப்ஷனாக “ என் இதயத்தை உருக்குகிறது” என பதிவிட்டுள்ளார். ஷாலினி பதிவிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அஜித்- ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
குட் பேட் அக்லியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்ததாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதால் அதற்காகவும் தயாராகி வருகிறார்.