விஷால் வழக்கை வேறு டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற வேண்டும்- ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு | Vishal case should be transferred to another division bench for trial

சென்னை,
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா நிறுவனம், செலுத்தியது. அப்போது செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை, விஷால் தயாரிக்கும் படத்தை லைகா நிறுவனத்திடம் கொடுக்கவேண்டும். ஆனால், ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த படத்தை வெளியிட முயற்சித்ததால், அவருக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடன் தொகை ரூ.21 கோடியே 29 லட்சத்துக்கு 30 சதவீத வட்டியுடன் லைகா நிறுவனத்துக்கு விஷால் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஷால் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், மும்மினேனி சுதீர்குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை ஏற்கனவே தான் விசாரித்துள்ளதாகவும், தற்போது இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறி வேறு டிவிசன் பெஞ்ச் முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.






