விவசாயிகள் போராட்டம் குறித்த அவதூறு: நடிகை கங்கனா ரணாவத் மீது சுப்ரீம் கோர்ட்டு காட்டம்

புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தனது எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துகளை பகிர்ந்து இருந்தார். இது தொடர்பாக கங்கனா ரணாவத் மீது பஞ்சாப்பை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை ரத்து செய்யுமாறு ரணாவத் தரப்பில் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கங்கனா மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்தது.
எனவே சுப்ரீம் கோர்ட்டில் கங்கனா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது கங்கனாவின் எக்ஸ் தள பதிவு குறித்து நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்தனர். அதாவது ஏற்கனவே வந்த பதிவைத்தான் கங்கனா மறுபதிவு (ரிடுவீட்) செய்ததாக அவரது வக்கீல் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள் பதிலளிக்கும்போது, ‘அது வெறும் மறுபதிவு அல்ல, அதில் நீங்கள் (கங்கனா) சிலவற்றை சேர்த்து இருக்கிறீர்கள். மசாலாவை சேர்த்து இருக்கிறீர்கள்’ என காட்டமாக தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரும் மனுவை கங்கனாவின் வக்கீல் திரும்பப்பெறுவதாக தெரிவித்தார்.