விளம்பர நிகழ்ச்சியில் நவ்யா நாயரை சீண்டிய ரசிகர்

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நவ்யா நாயர். தொடர்ந்து தமிழ், மலையாள மொழி படங்களில் நடித்து வரும் நவ்யா நாயர் கோழிக்கோடில் நடந்த ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
விழா முடிந்து நடிகை நவ்யா நாயர் நடிகர் சவுபின் ஆகியோர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாவலர்கள் புடைசூழ நட்சத்திரங்கள் சென்று கொண்டிருந்தனர். பலத்த பாதுகாப்பை மீறி திடீரென ஒரு ரசிகர் நவ்யா நாயர் உடலை தொட்டார். இதை பார்த்த சவுபின் அவரை தடுத்து நிறுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத நவ்யா நாயர் தன்னை தொட்ட நபரை முறைத்து பார்க்க தொடங்கினார்.
இதை கண்ட அந்த நபர் அந்த இடத்தில் இருந்து விலகி சென்றார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் நவ்யா நாயரை ரசிகர் சீண்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ காட்சிகளுக்கு ரசிகர்கள் சிலர் வெளியிட்டு உள்ள கருத்தில், நவ்யா நாயர் முறைத்து பார்த்தால் மட்டும் போதாது. வேறுவிதத்தில் பதிலளித்து இருக்க வேண்டும் என்பது உள்பட பல கண்டன கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.