“வில்லியாகவும், கவர்ச்சியாகவும் நடிக்க ஆசை” – காயத்ரி சங்கரின் வெளிப்படை பேட்டி

“வில்லியாகவும், கவர்ச்சியாகவும் நடிக்க ஆசை” – காயத்ரி சங்கரின் வெளிப்படை பேட்டி


‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ரம்மி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘விக்ரம்’, ‘பேச்சி’ என பல படங்களில் நடித்தவர், காயத்ரி சங்கர். தமிழ் தாண்டி மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘காந்தா’ படத்திலும் இவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது புதிய படங்களில் பிசியாக நடித்து வரும் காயத்ரி சங்கர், தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் சினிமாவுக்கு வந்தது திட்டமிட்ட பயணம் கிடையாது. எதிர்பாராமல் தான் சினிமாவுக்கு வந்தேன். பெங்களூருவில் என்னை ஒரு ஓட்டலில் இயக்குனர் பன்னீர்செல்வம் பார்த்து, படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். வாய்ப்பு தந்து நடிக்க வைத்துவிட்டார். அப்படி தமிழில் நான் நடித்த முதல் படம், `18 வயசு’. அப்படி இப்படி என சினிமாவில் என் வாழ்க்கை ஜாலியாக செல்கிறது.

கதை வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால் எனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இதுதான் எனக்கு வரும் என்று நினைத்துவிட்டார்களா? என்றுகூட எனக்கு தெரியவில்லை. என்னை `ஹோம்லி கேர்ள்’ என்று முத்திரை குத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்துக்கொண்டே இருந்தால், மற்ற கதாபாத்திரங்களின் நடிக்க முடியாமல் போய்விடுமே… என்ற பயமும் இருக்கிறது. வில்லியாக, கவர்ச்சியாக கூட நடிக்க ஆசை தான். இன்னும் சொல்லப்போனால் எனக்கு எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்த ஆசையாக இருக்கிறது.

கிசுகிசுக்களை நான் எப்போதுமே கண்டுகொள்வது கிடையாது. அதெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. ஏனெனில் உண்மையாக விஷயங்களுக்கு பயப்படலாம். திருத்திக்கொள்ள முயற்சிக்கலாம். உண்மையில்லாத விஷயத்துக்கு எந்த பதிலும் சொல்லவேண்டிய தேவையில்லை.

கவர்ச்சிக்கு என எந்த அளவுகோலும் நான் வகுத்ததில்லை. கதையை வைத்து தான் எதையுமே நாம் தீர்மானிக்க முடியும். ஒவ்வொரு கதைக்கும் கவர்ச்சி என்பதும் மாறுபடும். கதை சொல்லும்போது, ஒரு சில விஷயங்களில் எனக்கு சந்தேகம் இருந்தால் அதை கேட்டு தெளிவுபடுத்தி கொள்வேன். ஆனால் என் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் நானும் எதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டேன். மற்றபடி நான் எதற்கும் நோ சொல்லாத ஆள்’’. என்று கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *