"விண்ணைத்தாண்டி வருவாயா" குறித்து மனம் திறந்த நடிகை திரிஷா!

சென்னை,
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்த படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் விடிவி கணேஷ், கே எஸ் ரவிக்குமார், ஜனனி ஐயர் ஆகியோருடன் இணைந்து சமந்தா- நாக சைதன்யாவும் நடித்திருந்தனர்.
விண்ணைத்தாண்டி வருவாயா ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான சிறந்த ஆல்பங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். சிறந்த விமர்சனத்தை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வசூலை குவித்தது. அதுமட்டுமில்லாமல் இப்படம் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் (1000 நாட்கள்) என்கிற சாதனையை பெற்றுள்ளது. இந்தநிலையில் இந்த படம் வெளியாகி நேற்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் “விண்ணைத்தாண்டி வருவாயா” குறித்து நடிகை திரிஷா வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் “என் திரைப்பயணத்தின் மிகச் சிறந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி கௌதம் மேனன். இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு மிகவும் பெருமை அடைகிறேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம். ஜெஸ்ஸியை இன்னும் ஞாபகப்படுத்தி கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.