‘விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவார்…’ – நடிகை சிந்தியா | ‘Vijay will definitely return to acting…’

சென்னை,
மூன்றாம் உலகப்போர் பற்றிய சிந்தனையில் புதிய கதையம்சத்துடன் ‘அனலி’ என்ற திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த படம் வரும் ஜவரி 2-ந்தேதி வெளியாக உள்ளது. தினேஷ் தீனா இயக்கியுள்ள இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் ‘அனலி’ திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது நடிகையும், தயாரிப்பாளருமான சிந்தியா லூர்டே பேசுகையில், விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவார் என்று குறிப்பிட்டார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது;-
“இந்த படத்தில் நடித்துள்ள சக்தி வாசு, சுமார் 15 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருந்தாலும், தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் தொடர்ந்து ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பேன். பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
சினிமாவை விட்டு விலகப்போவதாக சொல்லும் விஜய்யுடன் நான் நடிப்பேன். விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவார். அதுவும் எனது தயாரிப்பில் உருவாகும் படத்தில் அவர் நடிப்பார். அது எப்படி நடக்கும் என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக நடக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






