விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸாகும் "கேப்டன் பிரபாகரன்"

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி  ரீ-ரிலீஸாகும் "கேப்டன் பிரபாகரன்"


சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 1979-ம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன.

ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் தான் விஜய்காந்திற்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. இந்த படத்தில் சரத்குமார், மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசைக்கு இசைஞானி இளையராஜா, வசனங்களுக்கு லியாகத் அலிகான், வில்லனாக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெறும் விதமாக சரத்குமார், அறிமுக மிரட்டல் வில்லனாக வீரபத்ரன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் என பலரும் பக்கபலமாக அமைந்ததுடன் இந்தப்படம் மூலம் தங்களது திரையுலக பயணத்தில் திருப்புமுனை பெற்றவர்கள் பலர். இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாசமுள்ள பாண்டியரே என்கிற பாடலும் ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடலும் இன்றைக்கும் ஒவ்வொரு ஊரிலும் திருவிழாக்களிலும் விசேஷ வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் கொண்டாட்ட பாடல்களாக அமைந்து விட்டன.

இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்ததால் இதனை ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர் அதற்கான போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 4 கே தரத்தில் டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளது. முருகன் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார். தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *