விஜயகாந்த் நினைவிடத்தில் தேசிய விருதை வைத்து எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை

விஜயகாந்த் நினைவிடத்தில் தேசிய விருதை வைத்து எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை


சென்னை,

71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். விருதுகள் முதலில் திரைப்பட விமர்சகர், மொழிவாரி படங்கள், குறும்படங்கள் என வழங்கப்பட்டு பின்னர் பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டது.

திரைப்படத்துறையின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் மோகன்லாலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். அதனை தொடர்ந்து சிறந்த இசையமைப்பாளர் விருது ‘வாத்தி’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.

அதையடுத்து சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் மலையாள நடிகர் விஜயராகவன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ்.பாஸ்கருக்கு ‘பார்க்கிங்’ படத்துக்காகவும், விஜயராகவனுக்கு பூக்காலம் படத்துக்காகவும் வழங்கப்பட்டது. எம்.எஸ்.பாஸ்கர் வேட்டி-சட்டையுடன் மிகவும் எளிமையாக வந்து விருதை பெற்றார். இதைப்போல சிறந்த துணை நடிகைக்கான விருது ‘உள்ளொழுக்கு’ மலையாள படத்துக்காக ஊர்வசிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருதுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விருதை வைத்து தலை வணங்கி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை எம்.எஸ்.பாஸ்கர் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்போது அவருக்கு பிரேமலதா வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக விஜயகாந்த் நினைவிடத்தில் உள்ள அவரது உருவப்படத்தை எம்.எஸ்.பாஸ்கர் கனத்த இதயத்துடன் கைகளால் தொட்டுப்பார்த்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *