"விஜயகாந்துக்கு அடுத்து விமல்தான்" – இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்

சென்னை,
எழில் இயக்கி விமல் நடித்த ‘தேசிங்குராஜா’ படம் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்குராஜா-2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. ஆர்.வி.உதயகுமார், ரவி மரியா, சிங்கம்புலி, நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்பட முன்னணி டைரக்டர்கள் பலரும் நடித்துள்ளனர். படம் விரைவில் ரிலீசுக்கு வருகிறது.
சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “விமலை பற்றி யார் என்னவேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் என்னை பொறுத்தவரை, நல்ல மனிதர். எப்போது போன் போட்டாலும் உடனே எடுத்து நிதானம் மற்றும் தெளிவுடன் பேசக்கூடியவர்.
நான், செல்வமணி போன்றோர் படங்கள் இயக்கிய காலங்களில் இருந்த ஹீரோக்களை விமல் மட்டும்தான் தற்போது பிரதிபலிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்துக்கு அடுத்து அனைவரிடமும் வெள்ளந்தி பேச்சால் ஈர்க்கக்கூடியவர், விமல். ஹீரோ என்ற தலைக்கணம் அவரது பேச்சில் இருக்கவே இருக்காது. பந்தா இல்லாத நடிகர்களில் விமல் முதன்மையானவர். எல்லாவற்றையும் அரவணைத்து போகக்கூடிய மனப்பான்மை கொண்ட விமலுக்கு தோல்வி என்பது கிடையாது. இனி வரும் காலம் அவருக்கு ஜெயமாக அமையும்” என்றார்.