விக்ரம் பிரபு ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாக நடிக்க வேண்டும் – ஆதிக் ரவிச்சந்திரன் | Vikram Prabhu should play not only the hero but also the villain

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் பிரபு தற்போது அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
கிராமிய பின்னணியில் பேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தினை அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ்ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது.
அதில் நடிகர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, “லவ் மேரேஜ் படத்தின் டிரெய்லரை 90ஸ் கிட்ஸ்களின் எதிரொலியாகத்தான் பார்க்கிறேன். இந்த படத்தின் முன்னோட்டத்துடன் என்னால் எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. இப்படத்தில் மிஷ்கின் பாடிய பாடலை கேட்டவுடன் இந்தப் பாட்டு ஹிட் ஆகும் என சொன்னேன். லவ் மேரேஜ் என்பது எல்லா தரப்பினரும் இயல்பாக கேட்டிருக்கும் பார்த்திருக்கும் வார்த்தை. நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான்.
இதனால் இந்தப் படத்திற்கு டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். பக்கத்து வீட்டு பையனாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதற்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். அவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.