வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. தனது திரைப் பயணத்தை எண்ணி நெகிழும் துல்கர் சல்மான்!

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர், கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘செக்கண்டு சோவ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் தற்போது நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் ‘ஐ அம் கேம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டில் கத்தார் தெலுங்கானா மாநில திரைப்பட விருது விழாவில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்திற்கு ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் சேர்த்து மொத்தம் 4 தெலுங்கானா மாநில விருதுகளை துல்கர் சல்மான் பெற்றிருக்கிறார். முதல் விருது 2018-ல் ‘ மகாநதி’ படத்திற்காகவும், 2022-ல் சீதாராமம் படத்திற்காகவும், 2024-ல் சிறந்த மூன்றாவது படம் என்ற பிரிவில் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்காகவும் பெற்றுள்ளார்.
இந்தநிலையில், நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருது வென்றது குறித்தும், தனது திரைப்பயணத்தை குறித்தும் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “தெலுங்கு சினிமாவில் எனது பயணம் அசாதாரணமானது. தெலுங்கு சினிமாவில் எனக்கு கிடைக்கும் அற்புதமான கதாபாத்திரங்களை நினைத்து மகிழ்கிறேன். நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது. விருது கிடைக்கிறது. இந்த உணர்வை விவரிக்க வார்த்தையே இல்லை.
துரதிர்ஷ்டவசமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. அதில் ஒரு பகுதியாக இருப்பதை நான் மிகவும் தவறவிட்ட ஒன்று. கடைசியாக நாகி, ஸ்வப்னா, பிரியங்கா, ஹனு சர் மற்றும் வெங்கி ஆகியோர் நான் இல்லாதபோது எனது விருதைப் பெற்றிருப்பது கவிதை என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த அற்புதமான இடம் இல்லாமல், இவை எதுவும் சாத்தியமில்லை”. என்று பதிவிட்டுள்ளார்.