''வானரன்'' – சினிமா விமர்சனம்

''வானரன்'' – சினிமா விமர்சனம்


சென்னை,

மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ், கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம்.மனைவியை இழந்து தனது ஒரே மகளுடன் வாழ்ந்து வரும் பிஜேஷ், அனுமன் வேடம் போட்டு, யாசகமாக கிடைத்த பணத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

தனது மகள் ஆசைப்பட்டு கேட்ட விலை உயர்ந்த செருப்பை வாங்கி தர போராடுகிறார். இந்த சூழலில் நோயால் பாதிக்கப்படும் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

மகள் ஆசைப்பட்ட செருப்பையே வாங்கி தர முடியாத அவரால், அறுவை சிகிச்சைக்கு பணத்தை புரட்ட முடிந்ததா? மகளின் உயிரை காப்பாற்ற முடிந்ததா? என்பதே மீதி கதை.

கையேந்தி யாசகம் கேட்கும் கதாபாத்திரத்தில் பிஜேஷ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் கலங்கடிக்கிறார்.

கதாநாயகியாக வரும் அக்சயாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பில் நிறைவு. சிறுமியாக வரும் வர்ஷினி, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசர வைக்கிறார். தந்தைக்கு ஆறுதல் கூறும் இடங்கள் அழகு.

தீபா சங்கர் – நாஞ்சில் விஜயன் கூட்டணி கலகலப்புக்கு போராடி இருக்கிறது. ஆதேஷ் பாலாவின் நடிப்பு கவனம் இருக்கிறது. இதர நடிகர் – நடிகைகளின் நடிப்பிலும் குறை இல்லை.

நிரன் சந்தரின் ஒளிப்பதிவும், ஷாஜகானின் இசையும் ஓரளவு கவனிக்க வைக்கிறது. உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் பலம். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசையிலும் அழுத்தம் இல்லை.

சாமானிய மனிதர்கள் சமாளிக்க முடியாத பிரச்சினைகளை சந்திக்கும் பொழுது எப்படி எல்லாம் மாறுவார்கள்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் பத்மநாபன். ‘கிளைமேக்ஸ்’ மனதை கனக்க செய்கிறது.

வானரன் – அழுத்தக்காரன்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *