வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக இருந்து வருபவர் எஸ்.நாராயண். இவரது மனைவி பாக்யவதி. இந்த தம்பதியின் 2-வது மகன் பவன். எஸ்.நாராயண் தனது குடும்பத்துடன் பெங்களூரு ஞானபாரதி அருகே வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு பவனுக்கும், பவித்ரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தற்போது பவனை பிரிந்து பவித்ரா வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மாமியார் மீது பவித்ரா வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கும், பவனுக்கும் 2021-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்திருந்தது. திருமணமான 3 மாதங்களிலேயே மாமனாா், மாமியார் என்னை கொடுமைப்படுத்தினார்கள்.
அதனால் 2022-ம் ஆண்டில் இருந்து நானும், கணவரும் தனி குடித்தனம் சென்று விட்டோம். திருமணத்தின் போது ரூ.1 லட்சம் கொடுத்ததுடன் திருமணத்திற்கான செலவை எனது பெற்றோரே ஏற்றுக் கொண்டு இருந்தனர். எனது கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
நான் தான் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தினேன். கணவர் கார் வாங்க எனது பெற்றோர் ரூ.1 லட்சம் கொடுத்தனர். எனது தாயிடம் தனியாக கணவர் ரூ.75 ஆயிரத்தை வாங்கினார். தற்போது என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ.10 லட்சத்தை கடனாக கொடுத்திருந்தோம். அந்த கடனை திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி கேட்டதால் என்னை கணவர், அவரது குடுமபத்தினர் தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில், எஸ்.நாராயண், பாக்யவதி, பவன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவாகி உள்ளது.மேலும் எஸ்.நாராயண் உள்பட 3 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.