வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு: சிங்கமுத்துவுக்கு அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு

சென்னை,
வடிவேலு, சிங்கமுத்து இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டின் காரணங்களால் இருவரும் ஒன்றாகத் திரையில் தோன்றுவதில்லை. இதற்கிடையில் வடிவேலு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கமுத்து மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தன்னை பற்றி சிங்கமுத்து யூடியூப்-ல் தரக்குறைவாகப் பேசியதால் ரூ.5 கோடியை நஷ்டஈடாக வழங்க வேண்டும். அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க கூடாது. வடிவேலு பற்றிப் ஏற்கனவே பேசியிருந்த வீடியோக்களை யூடியூப்பிலிருந்து நீக்க வேண்டும். மேலும் இதுகுறித்த பதிலுரை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிங்கமுத்து பதிலுரை தாக்கல் செய்யாததால் அவர் வடிவேலு பற்றி அவதூறாகப் பேச தடை விதிக்கப்பட்டது. ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து வடிவேலுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.