“லோகா” படம் பார்த்துட்டு சூர்யா-ஜோதிகா வாழ்த்துனாங்க – நடிகர் நஸ்லேன்

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது.இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ‘லோகா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. திரைப்படம் தமிழில் இன்று வெளியானது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் வெளியிடுகிறது.
இந்நிலையில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த “லோகா” படம் உலக அளவில் ரூ.101 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லோகா’ படம் மலையாளம் தாண்டி நாடு முழுவதும் ஹிட் ஆகியிருக்கிறது.
‘லோகா’ படத்தில் சிறப்பான நடிப்புக்காக பாராட்டப்பட்டு வருகிறார் பிரேமலு புகழ் நஸ்லென். இன்று சென்னையில் நடைபெற்ற ‘லோகா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், படத்தின் வெற்றிக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பதாகப் பேசியுள்ளார் நஸ்லென்.
வெற்றி விழாவில் பேசிய நஸ்லென், “இப்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன். லைப்ல என்னன்னவோ நடக்குது… ரொம்ப ஆச்சரியமா இருக்கு. காலையில சூர்யா சாரும் ஜோதிகா மேடமும் வீடியோ கால் பண்ணி படம் நல்லா இருந்தது சொன்னாங்க. இதற்கெல்லாம் ரொம்ப நன்றியுடன் இருக்கேன். வாழ்க்கை எனக்கு கொடுக்குற விஷயங்களை பணிவா ஏத்துக்கிறேன். எங்களை சப்போர்ட் செய்த எல்லோருக்கும் நன்றி” என்றார்.