''ரொம்ப அழுதேன்…என்னுடன் நின்றது அவர்தான்'' – தமன்

சென்னை,
தொடர்ச்சியாக பல படங்களுக்கு இசையமைத்து தான் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பதை தமன் நிரூபித்து வருகிறார். அவர் கடைசியாக பவன் கல்யாண் நடித்த ”தே கால் ஹிம் ஓஜி” படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில், இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிந்தைய நேர்காணலில், மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் பற்றிப் பேசும்போது வருத்தம் தெரிவித்தார். குண்டூர் காரம் படத்திற்கு இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டபோது அவர் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார்.
”குண்டூர் காரம் படத்திலிருந்து தமனை அகற்று” என்ற ஹேஷ்டேக்குடன் எக்ஸில் 67.1 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் பகிரப்பட்டன.
அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த தமன், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார்.
இதைப் பற்றி அவர் மேலும் பேசுகையில், ”எனக்கு எதிரான விமர்சனங்களை கண்டபோது நான் ரொம்ப அழுதேன். திரிவிக்ரம் சார்தான் எவரெஸ்ட் சிகரத்தைப்போல என்னுடன் நின்றார். சமூக ஊடகங்களிலிருந்து விலகி வேலையில் கவனம் செலுத்தச் சொன்னார்” என்றார்.
தமன் தற்போது கையில் பல படங்களை வைத்திருக்கிறார். ”தி ராஜா சாப்”, ”அகண்டா 2”,என்பிகே111 (NBK111), சிரஞ்சீவி-பாபி படம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.