ரீ-ரிலீஸாகும் விஜய்யின் “ப்ரண்ட்ஸ்” திரைப்படம்

விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் ‘ப்ரண்ட்ஸ்’ . மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு, நட்பின் ஆழமான கதைக்களமும், அதிரடியான நகைச்சுவையும் தான் முக்கியக் காரணம். ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தின் கதை, மூன்று நண்பர்களின் ஆழமான பாசம், காதல் மற்றும் குடும்பப் பிணைப்புகளை மையமாகக் கொண்டது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் படம் மீண்டும் கொண்டாடப்படுவதற்கு முக்கியக் காரணம், விஜய், சூர்யா, வடிவேலு ஆகியோரின் கலகலப்பான கூட்டணியும், தலைமுறை தாண்டி நிற்கும் அதன் காமெடி காட்சிகளும்தான். சில ஆண்டுகளுக்கு முன் திடீரென்று ‘பிரே பார் நேசமணி’ ஹேஷ்டேக் உலகளவில் ஒரே ராத்திரியில் ட்ரெண்ட் ஆனது. வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் இன்றும் பேசப்படும் ஒன்று.
இந்த நிலையில் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 21-ந்தேதி மீண்டும் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், ‘ப்ரண்ட்ஸ்’ படமும் வெளியாக உள்ளதாக ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். விஜய் நடிப்பில் ரீ-ரிலீஸான ‘கில்லி’ திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரை வசூல்செய்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, சமீபத்தில் வெளியான விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படமும் கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.