”ராம் சரணுக்கு வெற்றி படத்தை தராததற்கு வருந்துகிறேன்”

சென்னை,
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ”கேம் சேஞ்சர்”. ஆனால் எதிர்பார்ப்புகளை அப்படம் பூர்த்தி செய்யவில்லை. ”ஆர்.ஆர்.ஆர்” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான இப்படம் படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
சமீபத்திய நேர்காணலில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, ஆர்.ஆர்.ஆர் படத்திற்குப் பிறகு ராம் சரணுக்கு ஒரு வெற்றி படத்தை வழங்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார். படத்தின் முடிவு தன் கைகளில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அவர் ஒரு நட்சத்திர ஹீரோவை வைத்து ஒரு பெரிய படத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்றும் 2027 அல்லது 2028 இல் வெளியிட இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்படம் பற்றிய விவரங்கள் மறைமுகமாக உள்ளநிலையில், அந்த ஹீரோ அல்லு அர்ஜுனாக இருக்கலாம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.