ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு… நிராகரித்த 33 வயது நடிகை

சென்னை,
பான்-இந்திய திரைப்படமான ராம் சரணின் ”பெத்தி” படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகை சுவாசிகா (33) நிராகரித்ததாக தெரிவித்துள்ளார்.
‘வைகை’ படத்தின் மூலமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுவாசிகா. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், ‘லப்பர் பந்து’ படத்தில் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார்.
தொடர்ந்து ‘மாமன்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இவ்வாறு சமீப காலமாக பல்வேறு திரைப்படத்துறைகளில் பல கதாபாத்திரங்களில் நடித்து வரும் சுவாசிகா, ராம் சரணின் ”பெத்தி” படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,”எனக்கு அடுத்தடுத்து அம்மா வேடங்கள் வருகின்றன. சமீபத்தில் பெத்தி படத்தில் ராம் சரணின் அம்மாவாக நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த கட்டத்தில், ராம் சரணின் அம்மாவாக நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், அதைப் பற்றி யோசிப்பேன்” என்றார்.
புச்சி பாபு சனா இயக்கி வரும் பெத்தி படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.