ராம்சரண் படப்பிடிப்பில் விபத்து; படக்குழுவினர் காயம்

ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் ராம் சரண், தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார். நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகும் இந்த படத்தை ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார்.
இதில் கடலில் நடக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டு வந்தது. இதற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து காட்சியை படமாக்க தயாரானார்கள். ஒரு பிரமாண்ட தொட்டியில் 2,800 லிட்டர் தண்ணீர் சேகரிக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சியை படமாக்க தயாரானபோது, திடீரென தண்ணீர் தொட்டி வெடித்தது. இதனால் தொட்டியில் இருந்த தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் சிதறி ஓடியது. இதில் படக்குழுவினர் சிலருக்கு காயம் ஏற்பட்டது. தண்ணீர் தொட்டி வெடிக்கும் சமயம் அருகில் யாரும் இல்லாததால் நல்லவேளையாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதுகுறித்து நிகில் சித்தார்த்தா கூறும்போது, ‘படக்குழுவினர் அனைவருமே பாதுகாப்பாக இருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய விபத்தில் இருந்து தப்பித்தோம். விலையுயர்ந்த உபகரணங்களை இழந்தாலும், கடவுள் அருளால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை’, என்று தெரிவித்தார்.
விபத்து தொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரண் தற்போது புச்சிபாபு இயக்கத்தில் ‘பெத்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது.