ராஜமவுலியின் "எஸ்.எஸ்.எம்.பி 29" படப்பிடிப்பில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்பு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் “எஸ்எஸ்எம்பி 29” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுமார் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஒடிசாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தில் பணிபுரிய சுமார் 500 பேர் கொண்ட குழுவினர் ஒடிசாவிற்கு சென்றிருப்பதாகவும், இந்த படப்பிடிப்பை வருகின்ற மார்ச் 28 வரை தியோமாலி மற்றும் தலமாலி மலைப்பகுதிகளில் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளது.